மும்பை: வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமியும் தொடக்கப் பந்தடிப்பாளர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதுகுப்பிடிப்பால் அவதிப்பட்டுவரும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளார் ஜஸ்பிரீத் பும்ராவும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆயினும், உடற்தகுதியைப் பொறுத்தே அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடிய ஷமி காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளார்.
மோசமான பந்தடிப்பால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த ரோகித் சர்மாவே இந்திய அணித்தலைவராக நீடிக்கிறார்.
மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவுகளாக சாம்பியன்ஸ் டிராபியில் பொருதவுள்ளன.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பிப்ரவரி 20ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பங்ளாதேஷுடன் மோதுகிறது. அதன்பின் 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் அது எதிர்த்தாடவுள்ளது.
பாகிஸ்தானில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்காததால், இந்திய அணி தனது ஆட்டங்களை மட்டும் துபாயில் விளையாடும்.
இதனிடையே, இந்தியா செல்லும் இங்கிலாந்து அணி ஐந்து டி20 போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. டி20 தொடர் ஜனவரி 22ஆம் தேதியும் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பும்ராவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் ஐந்து சதங்களுடன் 752 ஓட்டங்களைக் (சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டிக்கு முந்திய நிலவரம்) குவித்த கருண் நாயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அணித்தேர்வு குறித்து கருத்துரைத்த தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர், “பும்ராவின் உடற்தகுதி குறித்து பிப்ரவரி தொடக்கத்தில் தெரிவிப்போம். ரிஷப் பன்ட் அணியின் முதல்நிலை விக்கெட் காப்பாளராக இருப்பார்,” என்றார்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில் (துணைத்தலைவர்), விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா.