தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்சி, ஆர்சனல், நியூகாசல் - சரியான போட்டி

2 mins read
4fe562e6-aff8-4f84-8dd5-8828ef8b950a
பிரைட்டனுக்கு எதிரான சென்ற லீக் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் பெனால்டி மூலம் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்திய நியூகாசல் யுனைடெட்டின் அலெக்சாண்டர் ஈசாக் (வலது). - படம்: ஏஎஃப்பி

நியூகாசல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் பட்டியலின் முதல் ஐந்து இடங்களுக்குள் முடிப்பதற்கான போட்டி ‘தகிக்கிறது’.

பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் முடிக்கும் குழுக்கள் அடுத்த பருவத்தின் யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும்.

அப்படியிருக்கையில் இப்பருவம் நிறைவடையவிருக்கும் வேளையில் சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதிபெறும் போட்டியில் ஈடுபட்டுள்ள செல்சியும் நியூகாசல் யுனைடெட்டும் ஞாயிற்றுக்கிழமை லீக்கில் ஒன்றுடன் ஒன்று மோதவிருக்கின்றன;

ஏற்கெனவே லீக் கிண்ணத்தை வெல்வதை உறுதிப்படுத்திவிட்ட லிவர்பூல், சாம்பியன்ஸ் லீக்குக்கான போட்டியில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழுவான ஆர்சனலைச் சந்திக்கிறது.

இந்த நான்கு குழுக்களுக்கும் இந்த லீக் பருவத்தில் மூன்று ஆட்டங்களே எஞ்சியுள்ளன. வெற்றி, தோல்வி என்பது ‘வாழ்சா, சாவா’ போராட்டம், சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதிபெறும் போட்டியைப் பொறுத்தவரை.

சிங்கப்பூர் நேரப்படி இரவு ஏழு மணிக்கு நியூகாசலும் செல்சியும் மோதுகின்றன.

நியூகாசலின் செயின்ட் ஜேம்சஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இவ்வாட்டத்தில் எந்தக் குழு வெற்றிபெறும் என்று கணிப்பது சிரமம்.

இவ்விரு குழுக்களும் இந்தப் பருவம் சிறப்பாக விளையாடி வந்திருந்தாலும் அவ்வப்போது எதிர்பாரா வேளைகளில் மண்ணைக் கவ்வுவது வழக்கம்.

லீக் விருதை வென்றுவிட்ட லிவர்பூல், ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல்நிலை விளையாட்டாளர்கள் பலருக்கு ஓய்வு தந்து மாற்று ஆட்டக்காரர்களைக் களமிறக்கலாம். அது ஆர்சனலுக்கு சாதகமாக அமையலாம். சென்ற லீக் ஆட்டத்தில் செல்சி, லிவர்பூலை வென்றது அதற்குச் சான்று.

அதேவேளை ஆர்சனலிடம் சென்ற பருவம் காணப்பட்ட தன்னம்பிக்கையும் உத்வேகமும் இம்முறை குறைந்ததுபோல் தெரிகிறது. அதனால், எந்தக் குழு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லிவர்பூலும் ஆர்சனலும் சந்திக்கும் ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இதர லீக் ஆட்டங்களில் இப்பருவத்தின் யூயேஃபா யூரோப்பா லீக் இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ள மான்செஸ்டர் யுனைடெட், வெஸ்ட் ஹேம் யுனைடெட்டைச் சந்திக்கிறது.

யூரோப்பா லீக் இறுதியாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதவிருக்கும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், கிறிஸ்டல் பேலசை எதிர்கொள்கிறது.

இவ்விரு ஆட்டங்களும் சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.15 மணிக்கு நடைபெறும்.

இன்னொரு 9.15 மணி லீக் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி, சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறும் போட்டியில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழுவான நோட்டிங்கம் ஃபாரஸ்ட்டைச் சந்திக்கிறது.

குறிப்புச் சொற்கள்