லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வந்த மான்செஸ்டர் சிட்டி தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நான்கு பிரிமியர் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆர்சனல் குழுவும் ஃபுல்ஹம் குழுவும் மோதுகின்றன.
தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் உள்ள ஆர்சனல், ஃபுல்ஹமுக்கு எதிராகவும் வெற்றிபெற முயலும்.
ஃபுல்ஹம் குழுவும் இப்பருவத்தில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால், ஆர்சனல் சற்று கவனமாக விளையாடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இரவு 10 மணிக்கு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் இப்ஸ்விச் டவுன் குழுவும் போர்ன்மத் குழுவும் சந்திக்கின்றன.
புள்ளிப்பட்டியலில் 18வது இடத்தில் உள்ள இப்ஸ்விச் குழுவை போர்ன்மத் எளிதாக வெல்லக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இப்பருவத்தில் கடுமையாகத் திணறிவரும் லெஸ்டர் சிட்டி, சிறப்பாக விளையாடி வரும் பிரைட்டன் குழுவை எதிர்கொள்கிறது.
கடந்த இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடாத பிரைட்டன் இந்த ஆட்டத்தில் வெல்லும் முனைப்புடன் விளையாடும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆட்டமும் 10 மணிக்கு நடக்கிறது.
இப்பருவக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் உள்ள செல்சி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் (12.30 மணி) டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவுடன் மோதுகிறது.
அண்மையில் சௌத்ஹேம்டன் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி, தொடர் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளது. இந்த ஆட்டத்திலும் செல்சி கோல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் 35 புள்ளிகளுடன் லிவர்பூல் குழு முதலிடத்தில் உள்ளது.
செல்சி 28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆர்சனல் 28 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி 26 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.