தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உற்சாகத்தில் செல்சி; யுனைடெட் மீண்டும் தோல்வி

2 mins read
790bbbea-1100-419d-806f-27a3f551412f
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் செல்சி கோல் அடித்தத மார்க் குக்குரேலா. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முடிக்கும் அணி சாம்பியன்ஸ் லீக் பிரிவில் விளையாடுவது வழக்கம்.

கிண்ணத்தை ஏற்கெனவே வென்ற லிவர்பூல் அணி 83 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும் அடுத்த ஐந்து இடங்களில் உள்ள ஆர்சனல், நியூகாசல், செல்சி, ஆஸ்டன் வில்லா, மான்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் பருவத்தின் கடைசி ஆட்டம்வரை புள்ளிப் பட்டியலில் நெருக்கடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சனிக்கிழமை (மே 17) மான்செஸ்டர் யுனைடெட் அணியும் செல்சி அணியும் மோதின.

ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணிகளும் தவறவிட்டன.

இந்நிலையில் ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் செல்சி அணிக்கு கோல் அடித்தார் மார்க் குக்குரேலா. அதன்பின்னர் ஆட்டத்தைத் தற்காத்து விளையாடிய செல்சி இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் யுனைடெட் புள்ளிப் பட்டியலில் 39 புள்ளிகளுடன் 16வது இடத்தில் தத்தளிக்கிறது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் 68 புள்ளிகளுடனும் நியூகாசல் 66 புள்ளிகளுடனும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ளன.

அதேபோல் புள்ளிப்பட்டியலில் செல்சி மற்றும் ஆஸ்டன் வில்லா தலா 66 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி 65 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அதற்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன.

நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் அணியும் சாம்பியன்ஸ் லீக் கனவில் உள்ளது. அது தற்போது 62 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. அதற்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்