லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தின் புதிய பருவம் கடந்த வாரம் தொடங்கியது.
முதல் வாரத்தில் முன்னணி அணிகள் பல வெற்றியுடன் பருவத்தை ஆரம்பித்தன.
இருப்பினும் செல்சி அணி நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
புதிய நிர்வாகி, புது இளம் முகங்கள் என பல மாற்றங்கள் இருந்தாலும் செல்சி அணி எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இனி வரும் வாரங்களில் செல்சி அதன் திறமையை வெளிக்காட்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்கள் நடக்கின்றன.
இரவு 9 மணிக்கு செல்சி அணி உல்வர் ஹாம்டன் அணியுடன் மோதுகிறது. செல்சியைப் போலவே உல்வர் ஹாம்டனும் அதன் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அதனால் இரு அணிகளும் வெற்றிபெற போராடக்கூடும்.
இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் நியூகாசல் அணியும் போர்மவுத் அணியும் விளையாடுகின்றன. நியூகாசல் தனது முதல் ஆட்டத்தில் நன்றாக விளையாடி வெற்றிபெற்றது. மறுபக்கம் போர்மவுத் அதன் முதல் ஆட்டத்தில் சமநிலை கண்டது.
தொடர்புடைய செய்திகள்
இரவு 11.30 மணிக்கு லிவர்பூலும் பிரண்ட்போர்ட் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் அதன் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் உள்ளன. அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.
இந்தப் பருவத்தில் கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் லிவர்பூல் உள்ளது. அதனால் பிரண்ட்போர்ட் அணிக்கு தொடக்கத்தில் இருந்தே லிவர்பூல் நெருக்கடி தரக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

