லண்டன்: இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
சனிக்கிழமை இரவு பல முன்னணி அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) இரவு 2 ஆட்டங்கள் நடக்கின்றன.
முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியும் உல்வ்ஸ் அணியும் மோதுகின்றன. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி இப்போட்டியில் எளிதில் வெல்லும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
உல்வ்ஸ் அணியின் நிலைமை சற்று பரிதாபமாக உள்ளது. அந்த அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால், இந்த ஆட்டத்தை அது சமப்படுத்த போராடலாம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் செல்சி அணியும் லிவர்பூல் அணியும் மோதுகின்றன.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 11:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள லிவர்பூல் அணி 6ல் வெற்றி பெற்றுள்ளது. ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற இலக்குடன் அது களமிறங்கக்கூடும்.
செல்சி அணி நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமநிலையை கண்டதால் சற்று அதிருப்தியுடன் உள்ளது. அதனால், இந்த ஆட்டத்தில் வெற்றிபெற அது முயற்சி செய்யக்கூடும்.
இந்தப் பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல இரு அணிகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கலாம் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் லிவர்பூல் குழு முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 17 புள்ளிகளுடன் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி உள்ளது. 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ஆர்சனல் அணி இருக்கிறது.