தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
‘கேண்டிடேட்ஸ்’ போட்டிக்குச் செல்லும் மூன்றாவது இந்தியர்

சதுரங்கம்: பட்டத்தைத் தக்கவைத்த வைஷாலி

2 mins read
a7fdcd86-c696-4546-b92d-edf777e47613
2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்தியப் பெண் என்ற பெருமையை ஆர்.வைஷாலி பெற்றுள்ளார். - படம்: ஃபிடே

புதுடெல்லி: இந்திய சதுரங்க வீராங்கனை ஆர்.வைஷாலி, ‘ஃபிடே’ (FIDE) பெண்கள் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை இவ்வாண்டு மீண்டும் தக்க வைத்துள்ளார்.

இதனையடுத்து, 2026ஆம் ஆண்டு நடைபெறும் மதிப்புமிக்க ‘கேண்டிடேட்ஸ்’ போட்டிக்கு நேரடித் தகுதிபெற்றுள்ளார் 24 வயது வைஷாலி.

இறுதிச் சுற்றின்போது சீனாவின் டான் ஷோங்கியுடன் பொருதி, 11 சுற்றுகளில் 8 புள்ளிகளைப் பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வாகை சூடினார்.

இந்த வெற்றியின் மூலம், கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோருக்குப் பிறகு, 2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்தியப் பெண் என்ற பெருமையை வைஷாலி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி எளிதன்று என்றார் முன்னணி சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி.

“சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டி எனக்குச் சவாலாக இருந்தது. சென்னைக்குப் பிறகு, கிராண்ட் சுவிஸ் போட்டியில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்தேன். தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் தோல்வியடைந்தேன். அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

“கடந்த சில வாரங்களாக, நான் நிறைய மாற்றங்களைச் செய்ய முயன்றேன். சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் முடிவுகள் எனக்கு மனத்தளவில் பெருஞ்சுமையாக இருந்தது. இருப்பினும், நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு ஒரு வகையில் அந்த அனுபவமும் காரணம்,” என்று தமது இறுதி ஆட்டத்திற்குப் பிறகு ‘செஸ்பேஸ் இந்தியா’விற்கு அளித்த பேட்டியின்போது  வைஷாலி கூறினார்.

இது வைஷாலியின் இரண்டாவது பெண்கள் கேண்டிடேட்ஸ் போட்டியாகும். 

வைஷாலியின் தகுதி, கேண்டிடேட்ஸ் போட்டியில் இந்தியாவுக்குக் குறைந்தது மூன்று வலுவான விளையாட்டாளர்கள் பிரதிநிதிப்பதை உறுதிசெய்கிறது. இது இந்தியப் பெண்கள் சதுரங்கத்தில் புதியதொரு மைல்கல் ஆகும்.

குறிப்புச் சொற்கள்