புதுடெல்லி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அந்த 15 பேர் கொண்ட அணியில் சென்னையைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா இடம்பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டரான 29 வயது ஹேமலதா இதுவரை இந்திய அணிக்காக ஒன்பது ஒருநாள் போட்டிகளிலும் 15 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அக்டோபர் 3ஆம் தேதிமுதல் 20ஆம் தேதிவரை துபாய், ஷார்ஜா விளையாட்டரங்குகளில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்குபெறுகின்றன.
பிரிவிற்கு ஐந்து அணிகள் என, இரு பிரிவுகளாக அவ்வணிகள் மோதுகின்றன. நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்ளாதேஷ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
அக்டோபர் 4ஆம் தேதி நியூசிலாந்துடனும் 6ஆம் தேதி பாகிஸ்தானுடனும் இந்திய அணி பொருதவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குமுன் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடும்.
இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (அணித்தலைவர்), ஸ்மிரிதி மந்தனா (துணைத்தலைவர்), ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகெஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் காப்பாளர்), யஸ்திகா பாட்டியா (விக்கெட் காப்பாளர்), பூஜா வஸ்த்ராக்கர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.

