சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர், தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு வைக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. சென்னையின் மேற்கு மாம்பலம் வட்டாரத்தில் இருக்கும் ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவின் பெயர் விரைவில் அஸ்வின் பெயரில் அழைக்கப்படவிருக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தெருவில்தான் அஸ்வின் தற்போது வசித்துவருகிறார்.
அதிகாரபூர்வ பெயர்மாற்ற நிகழ்ச்சிக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர் மாற்றப் பரிந்துரையை அஷ்ஸ்வினுக்குச் சொந்தமான ‘கேரம் பால் ஈவென்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிட்டெட்’ நிறுவனம் சென்னை பெருநகர நிர்வாகத்துக்குச் சமர்ப்பித்தது. அவரைச் சிறப்பிக்கும் வகையில் ஆர்ய கெளடா ரோட் அல்லது ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவின் பெயரை மாற்றலாம் என்று அந்நிறுவனம் சமர்ப்பித்த பரிந்துரை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
சென்னை பெருநகர நிர்வாகம் அப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டதையடுத்து, ராமகிருஷ்ணபுரம் முதல் தெரு இனி அஸ்வினின் பெயரைத் தாங்கி நிற்கும்.