நியூயார்க்: சதுரங்க விளையாட்டில் 2024 டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு இரண்டு உலக வெற்றியாளர்களை அளித்துள்ளது.
சிங்கப்பூரில் நடந்த உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் டி.குகேஷ் வாகை சூடியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த உலக விரைவுச் சதுரங்கப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, 37, வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.
இவர் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டிலும் இப்பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
“இது இந்தியாவிற்கு உச்ச நேரம். குகேஷ் என்ற உலக வெற்றியாளரும் நம்மிடம் இருக்கிறார். எங்களது வெற்றி, தொழில்முறையாக சதுரங்கத்தைக் கையிலெடுக்க இளையர்கள் பலரையும் ஊக்குவிக்கும் எனக் கருதுகிறேன்,” என்றார் ஹம்பி.
குகேஷைப் போலவே, ஹம்பியும் தனது முதல் ஆட்டத்தில் தோற்றுப்போனார்.
ஆயினும், தனது கவனத்தை மீட்ட அவர், மெதுவாக புள்ளிப் பட்டியலில் முன்னேறத் தொடங்கினார். சக இந்திய வீராங்கனை துரோணவல்லி ஹரிகாவுடனும் உலக மரபார்ந்த சதுரங்க வெற்றியாளரான சீனாவின் ஜூ வெஞ்சுனுடனும் அவர் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில், எஞ்சிய மூன்று ஆட்டங்களும் வால் ஸ்திரீட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. அவற்றில், வெஞ்சுன், ரஷ்யாவின் கேத்தரினா லக்னோவுடனான ஆட்டங்களைச் சமன்செய்த அவர், கடைசி ஆட்டத்தில் இந்தோனீசியாவின் ஐரின் சுகந்தரைத் தோற்கடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, ஹரிகா உள்ளிட்ட அறுவரைவிட 0.5 புள்ளி அதிகம் பெற்று, ஹம்பி வெற்றியாளரானார். வெஞ்சுன் இரண்டாமிடத்தையும் லக்னோ மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
ஆண்கள் பிரிவில் வெற்றியாளர் பட்டம் வெல்ல வாய்ப்பிருந்ததாகக் கருதப்பட்ட இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஐந்தாமிடத்திற்குத் தள்ளப்பட்டார்.