தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்டில் சாதிக்க உதவிய சதுரங்கம்

2 mins read
dddbb073-dd9c-457f-9190-d3379e4e5608
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அனைத்துலக செஸ் லீக்கின்போது முன்னாள் உலக சதுரங்க வெற்றியாளர் விஸ்வநாதன் ஆனந்துடன் (வலது) யுஸ்வேந்திர சகல். - படம்: அனைத்துலக ஊடகம்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் யுஸ்வேந்திர சகல், 32.

ஒருநாள், டி20 என இருவகைப் போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நிகழ்த்திவரும் சகல், இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளைக் (187) கைப்பற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில், கிரிக்கெட் திடலில் சாதிக்க சதுரங்க விளையாட்டு தமக்குப் பெரிதும் கைகொடுத்ததாக சகல் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“போட்டிகளுக்குமுன் பயிற்சிபெறவும் தயாராகவும் சதுரங்கம் எனக்கு உதவி வருகிறது. பயணத்தின்போது, குறிப்பாக விமானத்தில் செல்லும்போது சதுரங்கம் விளையாடுவதைப் பெரிதும் விரும்புகிறேன். இணையவழி விரைவுச் சதுரங்க விளையாட்டு ஆறு, ஏழு நிமிடங்களில் முடிந்துவிடும்,” என்கிறார் சகல்.

‘அனைத்துலக செஸ் லீக்’கில் எஸ்ஜி அல்பைன் வாரியர்ஸ் குழுவின் தூதுவராக இவர் இருக்கிறார்.

சதுரங்கம், கிரிக்கெட் என இரு விளையாட்டுகளிலும் இந்தியாவிற்காகக் களமிறங்கியுள்ள ஒரே ஆட்டக்காரர் இவர்தான்.

உலக இளையர் சதுரங்க வெற்றியாளர் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள சகல், அதன்பின் சரியான ஆதரவாளர் கிடைக்காததால் அவ்விளையாட்டைக் கைவிட்டார்.

“23 ஆண்டுகளுக்குமுன், அதாவது 2000ஆவது ஆண்டு நான் சதுரங்கம் விளையாடியபோது ஒரே நாற்காலியில் ஆறு, ஏழு மணி நேரம் அமர வேண்டியிருந்தது. அது எனக்குப் பொறுமையைக் கற்றுக் கொடுத்து, என்னைப் பந்துவீச்சாளராக உருமாற்ற உதவியது. ஒரு பந்துவீச்சாளராக விக்கெட் வீழ்த்த முடியவில்லை எனில் விரக்தி அடைய நேரிடலாம். அவ்வேளையில் பொறுமை தேவை,” என்றார் சகல்.

சக இந்திய கிரிக்கெட் வீரர்களில் எவரேனும் சதுரங்கத்தில் இவரை விஞ்சியவராக இருக்கிறாரா எனச் சகலிடம் கேட்டதற்கு, “யாருமே இல்லை. இந்திய அணியில் என்னை எவராலும் வெல்ல முடியாது,” என்று பெருமையுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்