தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சதுரங்கம்: உலகின் முதல்நிலை வீரரை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா

1 mins read
1b340be4-1031-46a7-8e4c-434b263be368
எல்லா வகை சதுரங்க ஆட்டங்களிலும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பெருமையைப் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா. - படம்: ஃபிரீஸ்டைல் செஸ்

லாஸ் வேகஸ்: சதுரங்க விளையாட்டில் உலகின் முதல்நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராகத் தமிழக வீரர் ஆர் பிரக்ஞானந்தாவின் சாதனை தொடர்கிறது.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஃபிரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் தொடர் நடந்து வருகிறது. புதன்கிழமை (ஜூலை 16) நடந்த நான்காம் சுற்று ஆட்டத்தில் 39 நகர்த்தலில் கார்ல்சனை வென்றார் 19 வயதான பிரக்ஞானந்தா.

பத்து நிமிடங்களும் பத்து நொடிகளும் என்ற முறையில் அந்த ஆட்டம் விளையாடப்பட்டது.

இதற்கு முன்னர் கிளாசிக்கல், ரேப்பிட், பிளிட்ஸ் முறை ஆட்டங்களிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருக்கிறார். அண்மைய வெற்றியின்மூலம் எல்லா வகை சதுரங்க ஆட்டங்களிலும் கார்ல்சனை வீழ்த்திய பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் ஜெர்மனியின் கார்ல்ஸ்ருவா நகரிலும் நடந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றிபெற்ற கார்ல்சன், தற்போது ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

ஆயினும், லாஸ் வேகஸ் போட்டித் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை அவர் இழந்துவிட்டார். தற்போது வெள்ளைப் பிரிவில் நான்காம் நிலையில் இருக்கும் அவர், அதிகபட்சம் மூன்றாமிடத்தையே பிடிக்க முடியும்.

தற்போது 4.5 புள்ளிகளைப் பெற்றுள்ள பிரக்ஞானந்தா, மேலும் இருவருடன் இணைந்து வெள்ளைப் பிரிவில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

போட்டியின் வெற்றியாளர்க்கு 200,000 அமெரிக்க டாலர் (S$259,350) பரிசுத்தொகை கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்