குழப்பநிலையில் உள்ள செல்சியுடன் மோதும் சிட்டி

2 mins read
e8fd4423-67c1-4546-9d88-938b1e6d51ef
செல்சி நிர்வாகி என்ஸோ மரெஸ்கா (இடமிருந்து இரண்டாவது) கடந்த வாரம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். - படம்: இபிஏ

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தற்போது நிர்வாகி இல்லாமல் குழப்பநிலையில் இருக்கும் செல்சி, மான்செஸ்டர் சிட்டியுடன் மோதவுள்ளது.

செல்சி நிர்வாகியாக இருந்த என்ஸோ மரெஸ்கா சென்ற வாரம் எதிர்பாரா விதமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த சில லீக் ஆட்டங்களில் செல்சி சரியாக விளையாடாதது அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதேவேளை, குழுவின் நிர்வாகத் தலைவர்களுடனான கருத்துவேறுபாடே பணிநீக்கத்துக்கு முக்கியக் காரணம் என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், லீக் கிண்ணத்தை வெல்லும் போட்டியில் தீவிரமாக இறங்கியிருக்கும் சிட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) மோதவுள்ளது செல்சி.

எனினும், தற்போதைய நிலை காரணமாக இந்த ஆட்டத்தை வெல்வது சிட்டிக்கு எளிதாகிவிடும் என்றும் சொல்ல முடியாது. பழைய நிர்வாகி பதவிவிலகியதும் சம்பந்தப்பட்ட குழு புத்துயிர் பெறுவது பலமுறை நடந்திருக்கும் ஒன்று. சிட்டி நட்சத்திரங்களுக்கு ஈடுகொடுக்கும் வீரர்கள் செல்சியிலும் உள்ளனர்.

சிட்டி, லீக்கில் கடந்த வாரம் எதிர்பாரா விதமாக சண்டர்லண்டுடன் கோலின்றி சமநிலை கண்டது. அந்த ஆட்டம் சிட்டிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதேநேரம், சண்டர்லண்ட் இப்பருவம் எதிர்பார்ப்புகளை விஞ்சி ஓரளவு சிறப்பாகவே விளையாடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சண்டர்லண்டுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு வரை சிட்டி மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. சிட்டியின் தாக்குதல் வீரர் எர்லிங் ஹாலண்டைக் கையாள்வது சாதாரணமன்று.

சிங்கப்பூர் நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு 12.30 மணிக்கு சிட்டியும் செல்சியும் மோதுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மற்ற லீக் ஆட்டங்கள் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட், லீட்ஸ் யுனைடெட்டைச் சந்திக்கிறது. கடந்த வாரம் உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சுக்கு எதிரான ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1-1 என்று சமநிலை கண்டது யுனைடெட். இந்த லீக் பருவம் பாதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் உல்வ்ஸ் இன்னும் ஓராட்டத்தில்கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், லீட்சை எப்படியாவது வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இதர ஆட்டங்களில் நியூகாசல் யுனைடெட்டும் கிறிஸ்டல் பேலசும் மோதுகின்றன; எவர்ட்டன், பிரென்ட்ஃபர்டைச் சந்திக்கிறது; டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர், சண்டர்லண்டைச் சந்திக்கிறது.

குறிப்புச் சொற்கள்