மான்செஸ்டர்: எஃப் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி, அதன் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திரங்கள் நடத்தும் சால்ஃபர்ட் சிட்டி (Salford City) குழுவுடன் சனிக்கிழமை (ஜனவரி 11) மோதவிருக்கிறது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்குக்கு மூன்று தரநிலைகள் கீழ் உள்ள ‘லீக் 2’ லீக்கில் போட்டியிடும் சால்ஃபர்டின் உரிமையாளர்கள், வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் முன்னாள் யுனைடெட் நட்சத்திரங்களான டேவிட் பெக்கம், பால் ஸ்கோல்ஸ், கேரி நெவில், ஃபிலிப் நெவில், நிக்கி பட், ரயன் கிக்ஸ் ஆகியோர் ஆவர்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளராக இருப்பதுடன் சென்ற பருவத்தின் எஃப்ஏ கிண்ணப் போட்டியில் இறுதியாட்டம் வரை சென்ற சிட்டி, ‘லீக் 2’ குழுவான சால்ஃபர்டைத் தனது சொந்த மண்ணான எட்டிஹாட் விளையாட்டரங்கில் எளிதில் வென்றுவிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்டி உட்பட சனிக்கிழமை நடைபெறவிருக்கும் எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டங்களில் களமிறங்கும் இங்கிலிஷ் பிரிமியர் லிக் குழுக்கள் அனைத்தும் அதற்குக்கீழ் உள்ள லீக்குகளில் போட்டியிடும் குழுக்களுடன் மோதவிருக்கின்றன. பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், சனிக்கிழமை ஆக்ரிங்டன் ஸ்டேன்லியைச் (Accrington Stanley) சந்திக்கிறது.