ஆசியான் வெற்றியாளர் கிண்ண அரையிறுதியில் சிங்கப்பூர் வெளியேறியது

சிங்கப்பூர் அணியினரின் பெருமுயற்சி குறித்து பயிற்றுநர் பெருமிதம்

2 mins read
420cc186-1225-4c1e-b6e0-83150d494b8a
ஆசியான் வெற்றியாளர் கிண்ண அரையிறுதி இரண்டாம் ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூரை வியட்னாம் வென்றது. - படம்: ஏஎஃப்பி

பு தோ: ஆசியான் வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நடந்த அரையிறுதி இரண்டாம் ஆட்டத்தில், சிங்கப்பூர் காற்பந்து வீரர்கள் தங்களது நோக்கத்தை அறிந்து வியட்னாமுக்குச் சென்றனர். அங்கு பெரும் ஆரவாரத்தை எழுப்பும் ரசிகர்களை அமைதியடையச் செய்ய, ஆட்டத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே கோல் போட இலக்கு கொண்டிருந்தனர்.

அதன்படி, ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே வலைக்குள் பந்தை அவர்கள் செலுத்தினாலும், அது செல்லுபடியாகாது என நடுவர் எடுத்த முடிவு சர்ச்சையைக் கிளப்பியது.

இறுதியாக, அரங்கில் 15,284 ஆதரவாளர்களைக் கொண்ட வியட்னாமிய வீரர்களே 3-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடினர். சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரின் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வியட்னாம் வென்றிருந்தது.

எனவே, 5-1 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் வியட்னாமிடம் தோல்வியுற்ற சிங்கப்பூர், அரையிறுதியில் இப்போட்டியிலிருந்து வெளியேறியது.

சிங்கப்பூர் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருண், 34, ஆட்டத்தின் முடிவில் சோகமாகக் காணப்பட்டார். ஃபாரிஸ் ராம்லியின் கோல் செல்லுபடியாகாதது குறித்து கேட்டதற்கு, “பந்தை வலைக்குள் புகுத்தியவுடன், எங்களுக்கு உத்வேகம் கிடைத்தது. அதே விவேகத்தை தொடர விரும்பினோம். ஆனால், அது கைகூடாததால் சிரமமாக இருந்தது.

“இங்கு வந்து விளையாடுவது எப்போதும் கடினமான ஒன்று. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம் என நான் நினைக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் காற்பந்து விளையாட்டில் ஏற்படவே செய்கின்றன. அதை நாம் சமாளித்து, ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்றார்.

பின்னடைவு ஏற்பட்டாலும், சிங்கப்பூர் அணியினரின் செயல்பாடு குறித்து பயிற்றுவிப்பாளர் சுடோமு ஒகுரா மனநிறைவு கொண்டார்.

“இன்று எங்கள் ஆட்டக்காரர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் தங்களை மேம்படுத்தி வருகின்றனர்,” என்று அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்