காமன்வெல்த் போட்டிகள்: 100 மீட்டர் அரையிறுதியில் சாந்தி பெரேரா

காமன்வெல்த் போட்டிகள்: 100 மீட்டர் அரையிறுதியில் சாந்தி பெரேரா

1 mins read
634d119d-668c-437e-adc6-f27d5bbc64f7
ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற நான்காவது தகுதிச் சுற்றில் முதலாவதாக இலக்கைக் கடந்தார் சாந்தி பெரேரா (நடுவில்). - படம்: காமென்வெல்த் விளையாட்டுகள் சிங்கப்பூர்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர்க்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், சிங்கப்பூரின் திடல்தட வீராங்கனை சாந்தி பெரேரா வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 29 வயதான அவர், தகுதிச் சுற்று ஓட்டத்தில் முதலாவதாக இலக்கைக் கடந்து அசத்தினார்.

ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற நான்காவது தகுதிச் சுற்றில், சாந்தி 11.24 நொடிகளில் இலக்கை அடைந்தார். இது, இந்தப் பருவத்தில் அவரின் மிகச் சிறந்த நேரப் பதிவாகும். கடந்த 2023ஆம் ஆண்டின் ஆசியத் தடகளப் போட்டியில் அவர் படைத்த 11.20 நொடி என்ற தேசிய சாதனைக்கு மிக அருகில் இந்த நேரம் அமைந்தது.

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளின் பியான்சே டெஃபிரைட்டாஸ் இரண்டாவதாகவும் ஸாம்பியாவின் எட்னா இங்ஙாண்டுலா மூன்றாவதாகவும் வந்தனர்.

மொத்தம் 53 வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில், சாந்தி ஒட்டுமொத்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இங்கிலாந்தின் இமானி லான்சிகோட் முதலாவது இடத்தைப் பிடித்தார்.

காமன்வெல்த் போட்டியின் புதிய விதிமுறைப்படி, பருவத்தின் சிறந்த எட்டு வீராங்கனைகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றனர். தகுதிச் சுற்றிலிருந்து தேர்வான 17 வீராங்கனைகளுடன் சேர்ந்து அவர்கள் அரையிறுதியில் போட்டியிடுவர்.

தென்கிழக்காசிய, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள சாந்தி பெரேரா, இம்முறை காமன்வெல்த் இறுதிச் சுற்றில் பங்கேற்று பதக்கம் வெல்வதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்