மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சை எதிர்த்தாட விரும்புகிறார் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான கார்லோஸ் அல்கராஸ்.
இவ்வாண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) தொடங்குகின்றன.
இப்போட்டியில் முதன்முறையாகப் பட்டம் வெல்ல விரும்புகிறார் 20 வயதான ஸ்பானிய ஆட்டக்காரர் அல்கராஸ்.
அதிலும், பத்து முறை இறுதிக்கு முன்னேறி, பத்து முறையும் பட்டம் வென்ற 36 வயது செர்பிய வீரர் ஜோக்கோவிச்சை இறுதிப் போட்டியில் வெல்ல விரும்புகிறார் அவர்.
“ஜோக்கோவிச்சைத் தோற்கடித்து பட்டம் வெல்வதைவிடச் சிறப்பான ஒன்று இருக்க முடியாது,” என்கிறார் அல்கராஸ்.
கடந்த 2022ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொது விருதைக் கைப்பற்றியதே அல்கராஸ் வென்ற முதல் கிராண்ட் சிலாம் பட்டம்.
அதன்பின் 2023 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச்சை வீழ்த்தி, அவர் அதிர்ச்சி அளித்திருந்தார்.
இதனிடையே, ஆஸ்திரேலியப் பொது விருது ஆட்டங்களில் ஜோக்கோவிச், குரோவேஷியாவின் டினோ பிரிஸ்மிச்சையும் அல்கராஸ், பிரான்சின் ரிசார்ட் கஸ்கேயையும் எதிர்த்தாடவுள்ளனர்.

