டிரினிடாட்: டிரினிடாடில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை (ஜூன் 13), பாப்புவா நியூ கினியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8க்குச் செல்லும் கனவு கைகூடாமல் போனது.
வேகப் பந்து வீச்சாளரான ஃபஸல்ஹக் ஃபரூக்கி (3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்) உள்ளிட்ட, ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பாப்புவா நியூ கினி 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் ஆஃப்கான் பந்து வீச்சாளர்கள் தங்களுடன் பொருதும் அணியைத் திணறடித்து ஈரிலக்க ஓட்ட எண்ணிக்கையில் தோற்கடித்தது இது மூன்றாவது முறை.
பூவா தலையாவில் வென்ற ஆஃப்கானிஸ்தான் பந்துவீச முடிவெடுத்ததால் பாப்புவா நியூ கினி பந்தடிக்கக் களமிறங்கியது.
முதல் ஓவரிலேயே ஃபரூக்கி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது பாப்புவா நியூ கினி. இதையடுத்து, 96 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஃப்கானிஸ்தான், 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து, 101 ஓட்டங்கள் எடுத்தது.
அணியின் குல்பைதீன் நயிப் 49 ரன்கள் எடுத்தார். இறுதியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது ஆஃப்கானிஸ்தான்.
திங்கட்கிழமை (ஜூன் 17) அது வெஸ்ட் இண்டிஸ் அணியைச் சந்திக்கும்.