இளையர் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா

1 mins read
60b985b6-400b-4955-a507-7a1b4d9d8ecd
அரையிறுதியில் வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியின் மெக்மிலன் (இடது) - கேலம் விட்லர். - படம்: ஊடகம்

பெனோனி: தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவிருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை (பிப்ரவரி 8) நடந்த பரபரப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்து வெற்றியைச் சுவைத்தது.

முன்னதாக நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது இது ஒன்பதாம் முறை. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

நடப்பு வெற்றியாளரான இந்தியா ஐந்து முறையும் ஆஸ்திரேலியா மூன்று முறையும் கிண்ணம் வென்றுள்ளன.

இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்