தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: ஒருநாள் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு

1 mins read
02c73c32-abc4-46bc-b216-1609ca1f5251
ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித். - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோற்றுப்போனதை அடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அனைத்துலக ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

துபாய் அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடந்த அரையிறுதியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில் 73 ஓட்டங்களை எடுத்தார்.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்குக் கைகொடுத்தார் கோஹ்லி. அவர் 84 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (45), அக்சர் பட்டேல் (27), ராகுல் (42*), ஹார்திக் பாண்டியா (28) ஆகியோர் பொறுப்புடன் ஆட, இந்திய அணி 48.1 ஓவர்களில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், திடீர் ஓய்வை அறிவித்துள்ளார் 35 வயது ஸ்மித்.

“இது ஒரு மிகச் சிறந்த பயணம். அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் ஆடினேன். பல அற்புதமான தருணங்களும் அருமையான நினைவுகளும் நிரம்பிய பயணம் அது. இரண்டு உலகக் கிண்ணங்களை வென்றது சிறப்புக்குரியது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 12 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 5,800 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றபோதும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.

குறிப்புச் சொற்கள்