கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த பங்ளாதே‌ஷ்

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த பங்ளாதே‌ஷ்

படம்: இபிஏ

16 Aug 2026 - 4:18 pm

2 mins read

டார்வின்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது பங்ளாதே‌ஷ் அணி.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை பங்ளாதே‌ஷ் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

பங்ளாதே‌ஷ் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன.

தொடரின் முதல் ஆட்டம் கடந்த 13ஆம் தேதி டார்​வினில் உள்ள விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பங்ளாதே‌ஷ் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் முகம்மது 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் பந்தடித்த பங்ளாதே‌ஷ் சிறப்பாக விளையாடி 426 ஓட்டங்கள் குவித்தது. தன்​ஸித் ஹசன் 101 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இதன் மூலம் பங்ளாதே‌ஷ் அணி முதல் இன்னிங்சில் 228 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அது 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கேமரூன் கிரீன் சதமடித்தார்.

பங்ளாதே‌‌ஷின் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

57 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பங்ளாதே‌‌‌ஷ் வீரர்கள் பொறுமையாக விளையாடி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர்.

முதல் இன்னிங்சில் 6, இரண்டாவது இன்னிங்சில் 3 என மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹசன் முகம்மது ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) தொடரின் இரண்டாவது ஆட்டம் தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்