புதுடெல்லி: ‘இந்திய கிரிக்கெட்டின் கோஹினூர் வைரம்’ எனப் போற்றப்படும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இந்தியப் பந்துவீச்சாளர்கள் எவரும் இதுவரை தொடாத உயரத்தை எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை 30 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நம்பிக்கைப் பேரொளியாகத் திகழ்கிறார் பும்ரா.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் பும்ரா.
அத்தகைய சிறப்பான செயல்பாட்டால், அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவருக்கான தரப்புள்ளிகளும் 907ஆக உயர்ந்துள்ளன. இதற்குமுன், அண்மையில் ஓய்வுபெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளைப் பெற்றிருந்ததே இந்தியப் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற அதிகபட்ச தரப்புள்ளிகள்.
அனைத்துலக அளவில் இங்கிலாந்தின் சிட்னி பார்ன்ஸ் (932), ஜோர்ஜ் லோமன் (931), பாகிஸ்தானின் இம்ரான் கான் (922), இலங்கையின் முத்தையா முரளிதரன் (920) ஆகியோரே அதிகத் தரப்புள்ளிகளைப் பெற்ற பந்துவீச்சாளர்கள்.
இதனிடையே, சென்ற ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருது, சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் விருது என இரு பட்டியல்களில் பும்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.