புதுடெல்லி: வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.
அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போது முதுகுப்பிடிப்பால் அவதிப்பட்ட பும்ரா, இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச முடியாமல் போனது.
இந்நிலையில், முன்னர் நினைத்திருந்ததைவிட முதுகுப்பிடிப்பு மோசமாக இருப்பதால், அவரால் நீண்டகாலத்திற்கு விளையாட முடியாமல் போகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் ‘ரெவ்ஸ்போர்ட்ஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியிலும் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.
அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நடத்தும் போட்டித் தொடரில் பும்ரா விளையாட வேண்டுமெனில், தேசிய கிரிக்கெட் பயிலக மருத்துவக் குழுவிடமிருந்து அவர் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
ஆயினும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்றும் அதே நேரத்தில் உடல்தகுதியைப் பொறுத்து அவர் விளையாடுவது முடிவுசெய்யப்படும் என்றும் ‘ரெவ்ஸ்போர்ட்ஸ்’ செய்தி தெரிவித்துள்ளது.
பந்தடிப்பாளர்களைப் பொறுத்தமட்டில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அணித்தலைவராக ரோகித் சர்மா நீடிப்பார் என்றும் அவர் ஷுப்மன் கில்லுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இம்மாதம் 22ஆம் தேதி கோல்கத்தாவில் நடைபெறவுள்ளது.