தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: இந்தியா செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பால்

2 mins read
bf116394-7cee-4494-802a-257cb7430d1a
தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் முன்னணி ஆட்டக்காரர் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன். - படம்: எக்ஸ்/வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்

ஜமைக்கா: அடுத்த மாதம் நடைபெறும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா செல்லும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் பந்தடிப்பாளர்களான தேஜ்நரைன் சந்தர்பாலும் அலிக் அத்தனாசும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் முன்னணி ஆட்டக்காரர் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 15 பேர் கொண்ட அவ்வணியில் அதன் முன்னாள் தலைவர் கிரெய்க் பிராத்வெயிட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.

இடக்கை சுழற்பந்து வீச்சாளரான கேரி பியர் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார்.

அணியின் துணைத்தலைவரான ஜோமெல் வாரிக்கன் சுழற்பந்து வீச்சுக்குத் தலைமை தாங்குவார். இன்னோர் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான குடகேஷ் மோத்திக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 2026 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அவர் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.

இவ்வாண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரு போட்டிகளில் மொத்தம் 15 ஓட்டங்களையே குவித்ததால் மூன்றாவது போட்டியிலிருந்து பிராத்வெயிட் நீக்கப்பட்டார். சொந்த மண்ணில் நடந்த அத்தொடரின் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணைக் கவ்வியது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2ஆம் தேதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ரோஸ்டன் சேஸ் (அணித்தலைவர்), ஜோமெல் வாரிக்கன், கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அத்தனேஸ், ஜான் கேம்பெல், தேஜ்நரைன் சந்தர்பால், ஜஸ்டின் கி‌ரீவ்ஸ், ஷே ஹோப், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசஃப், ஷமர் ஜோசஃப், பிராண்டன் கிங், ஆண்டர்சன் ஃபிலிப், கேரி பியர், ஜேடன் சீல்ஸ்.

குறிப்புச் சொற்கள்