புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல், அதன் 18ஆவது பருவத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது.
10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் சில மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவில் நடந்து முடிந்தது.
இந்நிலையில், 18வது ஐபிஎல் பருவம் மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கும் என சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் இப்போது அதில் மாற்றம் இருக்கும் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
முதல் ஆட்டம் அடுத்த மாதம் 22ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அது கோல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒளிபரப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 22ம் தேதி தொடர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தேதி மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
முதல் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் என தகவல் வெளியாகி உள்ளது.