தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடித்து நொறுக்கிய இங்கிலாந்து; தொடர் தோல்வியால் தலைகுனிந்த பாகிஸ்தான்

2 mins read
d83a6aa6-b01b-495a-9233-c7743c30da9d
317 ஓட்டங்களை விளாசிய இங்கிலாந்தின் ஹேரி புரூக். - படம்: ஏஎஃப்பி

முல்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது சோதனைக் காலம்.

அண்மையில் பங்ளாதேஷ் அணியிடம் 2-0 என டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, இப்போது இங்கிலாந்து அணியிடம் வகையாகச் சிக்கி சின்னபின்னமானது.

கடந்த 7ஆம் தேதி முல்தானில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 556 ஓட்டங்களைக் குவித்தது. ஆனாலும், அது அவ்வணிக்குப் போதுமானதாக இல்லை.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 823 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணியின் ஹேரி புரூக் 317 ஓட்டங்களையும் ஜோ ரூட் 262 ஓட்டங்களையும் விளாசினர்.

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் 220 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

இது, பாகிஸ்தான் அணிக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்த ஆறாவது தோல்வி.

முதல் டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

முதல் இன்னிங்சில் 550 ஓட்டங்களுக்குமேல் விட்டுக்கொடுத்தபோதும், 200 ஓட்டங்களுக்குமேல் முன்னிலை பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணியின் 823 ஓட்டங்கள், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட நான்காவது ஆக அதிக ஓட்ட எண்ணிக்கை; 21ஆம் நூற்றாண்டில் இதுதான் ஆக அதிகம். பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் அணி குவித்த அதிகபட்ச ஓட்டங்களும் இதுதான்.

300 ஓட்டங்களை எடுக்க ஆகக் குறைந்த பந்துகளை எதிர்கொண்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஹேரி புரூக். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை ஆடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 12,664 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஜோ ரூட்டும் ஹேரி புரூக்கும் இணைந்து எடுத்த 454 ஓட்டங்களைச் சேர்த்ததே இங்கிலாந்து வீரர்கள் இருவர் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள்.

இங்கிலாந்து அணி 150 ஓவர்கள் பந்தடித்த நிலையில், ஒரே ஓர் ஓவரில் மட்டுமே ஓட்டமெடுக்காமல் ‘மெய்டன்’ ஓவராக அமைந்ததும் புதிய சாதனை.

குறிப்புச் சொற்கள்