புதுடெல்லி: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு19) உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு, அந்நாட்டின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏழரை கோடி ரூபாய் ($95.5 மில்லியன்) பரிசுப் பணத்தை அறிவித்திருக்கிறது.
இந்திய அணி, யு19 உலகக் கிண்ணத்தை வென்றது குறித்து ஒட்டுமொத்த நாடும் வாரியமும் பெருமைப்படுவதாக வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைக்கியா கூறினார். வாரியத்தின் தலைவர் மிதுன் மன்ஹாசும் இந்திய அணி வீரர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். யு19 உலகக் கிண்ணத்தை ஆறாவது முறை வெல்வது என்பது மிகப் பெரிய சாதனை என்றார் அவர். அதுவும் ஆண்கள் அணி, பெண்கள் அணி இரண்டுமே யு19 உலகக் கிண்ணத்தை வென்றிருப்பது, இந்திய கிரிக்கெட் கட்டமைப்பின் பலத்தைக் காட்டுவதாக மிதுன் குறிப்பிட்டார்.
பயிற்றுவிப்பாளர் ஹிரிஷிகேஷ் கனித்கருடைய வழிகாட்டுதலின்கீழ் விளையாடிய இந்திய அணி, உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை.
ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
முதலில் பந்தடித்த இந்தியா, 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்களைக் குவித்தது. அதன்வழி, யு19 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆக அதிக ஓட்டங்கள் எடுத்து இந்தியா சாதனை படைத்தது.
இந்தியாவின் 14 வயதுப் புயல் வைபவ் சூர்யவன்ஷி, 80 பந்துகளில் 175 ஓட்டங்களை விளாசினார். அவர் 15 பவுண்டரிகளையும் 15 சிக்ஸர்களையும் அடித்து இங்கிலாந்தைத் தொடக்கத்திலிருந்தே ஆட்டங்காணச் செய்தார். அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே 53 ஓட்டங்களும் அபிக்யான் குண்டு 40 ஓட்டங்களும் எடுத்தனர். கனிஷ்க் சௌஹான் 37 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் பந்தடித்த இங்கிலாந்து முதலில் முனைப்புடன் தொடங்கியது. ஜோசஃப் மூர்ஸ் ஆட்டமிழந்த பின்னர், பென் டாக்கின்சுடன் சேர்ந்து பென் மேய்ஸ் சிறப்பாக ஆடினார். டாக்கின்ஸ் 66 ஓட்டங்களும் மேய்ஸ் 45 ஓட்டங்களும் எடுத்தனர். இடையில் இங்கிலாந்து தடுமாறியது. 9 பந்துகளில் நான்கு விக்கெடுகளைப் பறிகொடுத்து அது திணறியது. 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இந்தியா வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது.
இங்கிலாந்தின் கேலப் ஃபால்க்னர் 67 பந்துகளில் 115 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை போராடினார். இங்கிலாந்து 311 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவர் கடைசியாக ஆட்டமிழந்தார். இந்தியாவின் அம்ப்ரிஷ் மூன்று விக்கெட்டுகளையும் கனிஷ்க் சௌஹானும் தீபேஷ் தேவேந்திரனும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் சூர்யவன்ஷி, ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

