துபாய்: ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்தியது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) இரவு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்தடித்தது.
ஷுப்மன் கில் 4 ஓட்டங்களிலும் அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 12 ஓட்டங்களிலும் வெளியேறினார்.
இருப்பினும், அபிஷேக் சர்மா வழக்கம்போல் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். அவர் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இணைந்து 66 ஓட்டங்கள் எடுத்தனர். சாம்சன் 23 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 202 ஓட்டங்கள் எடுத்தது.
203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா 58 பந்துகளில் 107 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.
நிசங்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த குசால் பெரேரா 58 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், கடைசிக்கட்டத்தில் இந்திய அணி சிறப்பாகப் பந்துவீச, இலங்கை அணியும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தைச் சமன்செய்தது.
இதனையடுத்து, வெற்றியாளரை முடிவுசெய்ய ‘சூப்பர் ஓவர்’ முறை பின்பற்றப்பட்டது. அதில் முதலில் ஆடிய இலங்கை அணி, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி இரண்டு ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே மூன்று ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை வென்றது.
சதமடித்த நிசங்காவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.