கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்த இந்தியா

2 mins read
263abc40-638a-4b3b-b4cb-3a96081749b7
வெற்றிபெற்ற உற்சாகத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கோல்கத்தாவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றுள்ளது. மேலும், கெளதம் காம்பீர் பயிற்சியின்கீழ் நான்காவது முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் வீழ்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கிய ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பும்ரா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா போலவே ஓட்டங்கள் குவிக்கத் தடுமாறியது.

இந்திய அணித் தலைவர் ‌ஷுப்மன் கில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாகப் பந்தடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறினார். மற்ற வீரர்களும் சரியாக விளையாடாததால் இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் 189 ஓட்டங்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

30 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா மீண்டும் ஓட்டங்கள் குவிக்கத் தடுமாறியது. 153 ஓட்டங்கள் மட்டுமே அது எடுத்தது. ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

124 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் 93 ஓட்டங்களுக்கு இந்திய அணி சுருண்டது. காயம் காரணமாகக் கில் இரண்டாவது இன்னிங்சிலும் விளையாடவில்லை.

சைமன் ஹார்மர் இரண்டாவது இன்னிங்சிலும் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் நவம்பர் 22ஆம் தேதி கெளகாத்தியில் நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்