இம்முறையும் இறுதியில் கோட்டைவிட்ட இந்தியா

2 mins read
9f3d2636-3f45-4666-a6a0-6668523be406
கடைசி ஆளாக இந்தியாவின் முகம்மது சிராஜ் ஆட்டமிழந்ததும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணியினர். படம்: ஏஎஃப்பி -

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக வெற்றியாளர் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

லண்டன் ஓவல் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்தது.

இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் பூவா தலையாவில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

அதனையடுத்து, முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 469 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 121 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அதன்பின் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்கிய ரகானே 89 ஓட்டங்களைச் சேர்த்தார்.

பின்னர் மீண்டும் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களை எடுத்த நிலையில், பந்தடிப்பை முடித்துக்கொள்வதாக அதன் தலைவர் பேட் கம்மின்ஸ் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 444 ஓட்டங்கள் எடுத்தால் கிண்ணம் கையில் வந்துசேரும் என்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது இந்திய அணி.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை அவ்வணி எடுத்திருந்தது. விராத் கோஹ்லியும் ரகானேவும் களத்திலிருந்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், ஐந்தாம் நாளில் தன் பங்குக்கு மேலும் ஐந்து ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 49 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார் கோஹ்லி. ஜடேஜாவும் ஓட்டமெடுக்காமல் வந்த வேகத்திலேயே திரும்ப இந்திய அணியைத் தோல்வி மேகம் சூழ்ந்தது.

இறுதியில் 234 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்து, இந்திய அணி 209 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

கடந்த 2021ஆம் ஆண்டிலும் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்தியா, நியூசிலாந்திடம் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது நினைவுகூரத்தக்கது.