துபாய்: சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. ஆட்டம் துபாயில் நடக்கிறது.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகமுக்கியமான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அது அரையிறுதிக்கு முன்னேறும்.
தோல்வியடைந்தால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் உருவாகும். அதனால் இந்த ஆட்டத்தை இந்தியா வெல்லப் போராடலாம்.
மறுபக்கம் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால் அதன் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். அதனால் பாகிஸ்தான் கவனமாக விளையாடக்கூடும்.
பந்தடிப்பில் திணறல்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றிருந்தாலும் இந்திய அணியின் பந்தடிப்பு சற்று பலவீனமாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அணித்தலைவர் ரோகித் சர்மா, ஷப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்கள் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் இந்தியாவுக்குச் சிக்கல் ஏற்படக்கூடும்.
மற்ற முன்னணி வீரர்கள் அவ்வப்போதுதான் நன்றாக விளையாடுவதால் இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
பந்துவீச்சில் முழுமையான திறமையை இந்தியா பயன்படுத்தவில்லை என்று குறைகூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராகத் தவறுகளைத் திருத்திக்கொண்டு இந்தியா விளையாட வேண்டும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பரிதாபம்
பாகிஸ்தான் அணி பந்துவீச்சு, பந்தடிப்பு, களக்காப்பு என அனைத்துத் துறைகளிலும் பலவீனமாகக் காட்சி தருகிறது.
முதல் ஆட்டத்தில் சல்மான் ஆஹா, குஷ்தில் ஷா மட்டுமே நம்பிக்கை அளித்தனர்.
பாபர் அசம், முகம்மது ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று ரசிகர்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
பந்துவீச்சும் சுமாராக இருப்பதால் செய்வது அறியாது பாகிஸ்தான் நிற்கிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் காட்டும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கலாம்.
சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இருப்பினும் அரசியல் காரணங்களால் இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
அரையிறுதிக்கும் இறுதியாட்டத்திற்கும் இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டங்களும் துபாயில் நடக்கும்.