தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: கிண்ணத்தை வாங்க மறுத்த இந்தியா; எடுத்துச் சென்ற பாகிஸ்தான் அமைச்சர்

2 mins read
f03c712b-0824-4bd5-8c9a-8d197ce47121
கிண்ணம் இல்லாததால் இந்திய அணி வீரர்கள் பரிசு மேடையில் கிண்ணம் இருப்பதுபோல் பாவித்துக் கொண்டாடினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

துபாய்: ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பல சர்ச்சைகளும் வெடித்தன.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை ஒன்பதாவது முறையாகக் கைப்பற்றியது.

முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பர்ஹான் 57 ஓட்டங்களும் ஃபக்கர் சமான் 46 ஓட்டங்களும் எடுத்து அருமையாக அடித்தளம் அமைத்தனர். ஆனால் அதை மற்ற பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்தத் தவறினர். குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெடுகள் இழந்த இந்திய அணியைத் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் மீட்டனர்.

இறுதிக்கட்டத்தில் சிவம் துபே அதிரடியாக ஓட்டங்கள் குவிக்க இந்திய அணி 19.4 ஓவர்களில் 150 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் எடுத்த திலக் வர்மா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். தொடர் நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

சர்ச்சைகள்

ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தை இந்திய அணி வாங்க மறுத்தது. இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது.

திரு நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர், அவர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் கூட.

கிண்ணத்தை இந்திய அணி வாங்க மறுத்ததால் கிண்ணத்தையும் பதக்கங்களையும் நக்வி எடுத்துச் சென்றார். இது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

கிண்ணத்தையும் பதக்கங்களையும் இந்தியாவிடம் கொடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கிண்ணம் இல்லாததால் இந்திய அணி வீரர்கள் பரிசு மேடையில் கிண்ணம் இருப்பதுபோல் பாவித்துக் கொண்டாடினர்.

உயிரிழந்தோருக்கு உதவி

இந்நிலையில் ஆசியக் கிண்ணத் தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக்கான ஊதியத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் ஆயுதப்படைக்கு அளிப்பதாகச் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் மாண்ட பாகிஸ்தான் மக்களுக்குத் தங்களது போட்டி ஊதியத்தை வழங்கவுள்ளதாகப் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி ஆகா கூறியுள்ளார்.

பரிசளிப்பு நிகழ்வின்போது பாகிஸ்தான் அணிக்குக் கொடுக்கப்பட்ட காசோலையை சல்மான் அலி மேடையிலிருந்து தூக்கி எறிந்ததும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்