தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வெளுத்துக் கட்டிய இந்தியா

2 mins read
மூன்றாம் நாளிலேயே முடிவிற்கு வந்த ஆட்டம்
26e043db-5c85-40b0-93b8-c2e6c8592f0f
வெஸ்ட் இண்டீஸ் வீரர் அலிக் அத்தனேஸ் அடித்த பந்தைப் பிடித்து, அவரை ஆட்டமிழக்கச் செய்தார் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.

பூவா தலையாவில் வெற்றிபெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்தடித்தது.

முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 162 ஓட்டங்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது.

அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ஓட்டங்கள் எடுத்தார். சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து பந்தடித்த இந்தியா அபாரமாகச் செயல்பட்டது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 100 ஓட்டங்களைச் சேர்த்தார். அணித் தலைவர் ‌ஷுப்மன் கில் 50 ஓட்டங்களை எடுத்தார்.

துருவ் ஜூரெல் (125), ரவீந்திர ஜடேஜா (104*) என மேலும் இருவர் சதமடித்தனர்.

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்தது.

286 ஓட்டங்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ். இம்முறை சிராஜின் வேகத்திலும் ஜடேஜாவின் சுழலிலும் அந்த அணி சிக்கியது.

இறுதியில் 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அவ்வணி படுதோல்வியடைந்தது.

இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பந்துவீச்சிலும் பந்தடிப்பிலும் சிறப்பாகச் செயல்பட்ட ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த ஐந்து போட்டிகளும் மூன்று நாள்களுக்குள் முடிந்தது கூடுதல் சிறப்பம்சம்.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்