மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மூன்று டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்று நியூசிலாந்திடம் பறிகொடுத்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் மோசமான தோல்வியைத் தழுவியதால் மூன்றாவது ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய சூழலில் களமிறங்கியது இந்தியா.
மும்பையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) காலை தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து முதலில் பந்தடித்தது.
வில் யங் 71 ஓட்டங்களும் டேரில் மிட்சல் 82 ஓட்டங்களும் குவித்து நியூசிலாந்துக்கு வலுசேர்த்தனர். இறுதியில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 77 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இருப்பினும் இரண்டாவது நாள் ஆட்டத்தை (நவம்பர் 2) இந்தியா சிறப்பாகத் தொடங்கியது.
ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கில் 90 ஓட்டங்களிலும் பண்ட் 60 ஓட்டங்களிலும் வெளியேறினர். அதன் பின்னர் வாஷிங்டன் சுந்தர் விரைவாக 38 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்கள் எடுத்து 28 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து தொடக்க முதல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்கள் வெளியேறினர். இருப்பினும் வில் யங் மீண்டும் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்கள் எடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து அணி 171 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.