டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மகளிரணி வரலாற்று வெற்றி!

1 mins read
b6cb57a6-6ebf-4510-95c6-849448495b88
வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்திய அணித் தலைவி ஹர்மன்பிரீத் கவுர். - படம்: பிசிசிஐ
multi-img1 of 2

மும்பை: ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய மகளிரணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இதுவே முதன்முறை.

இந்திய, ஆஸ்திரேலிய மகளிரணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே விளையாட்டரங்கில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 219 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 406 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா (74), ரிச்சா கோஷ் (52), ஜெமிமா ரோட்ரிகெஸ் (73), தீப்தி சர்மா (78) ஆகிய நால்வர் அரைசதம் கடந்தனர்.

187 ஓட்டங்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஆயினும், நான்காம் நாளில் இந்திய வீராங்கனையரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அவ்வணி 261 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இதனையடுத்து, வெற்றிக்கு 75 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டி இந்திய மகளிரணி வெற்றியைச் சுவைத்தது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த ஸ்நேஹ் ராணா ஆட்ட நாயகியாகத் தேர்வானார்.

குறிப்புச் சொற்கள்