தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் டிராபி: சாதித்தது இந்தியா

3 mins read
மூன்று முறை கிண்ணம் வென்ற முதல் அணி எனும் பெருமையைப் பெற்றது
e6106167-b117-4ee1-8174-ff9a0a6172a3
கிண்ணம் வென்று சாதித்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் இறங்கிய இந்திய அணியினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 5

துபாய்: வாகையர் கிண்ணம் என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாம் முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

2002ஆம் ஆண்டில் இந்திய அணியும் இலங்கை அணியும் கிண்ணத்தைப் பகிர்ந்துகொண்ட நிலையில், 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியிருந்தது.

இம்முறை, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்களைச் சேர்த்தது. அவ்வணியில் டேரல் மிட்செல் 63 ஓட்டங்களையும் மைக்கல் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் வருண் சக்கரவர்த்தியும் குல்தீப் யாதவும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அணித்தலைவர் ரோகித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இணைந்து அருமையான தொடக்கம் தந்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 105 ஓட்டங்களைக் குவித்தனர்.

ஆயினும், குறுகிய இடைவெளியில் ஷுப்மன் கில் (31), விராத் கோஹ்லி (1), ரோகித் (76) என இந்திய அணி மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் ஐயரும் (48) அக்சர் பட்டேலும் (29) நிதானமாகப் பந்தடித்து, விக்கெட் சரிவைத் தடுத்தனர்.

அவ்விருவரோடு ஹார்திக் பாண்டியாவையும் (18) இந்திய அணி இழந்தபோதும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடி, 34 ஓட்டங்களை எடுத்து இந்திய அணியை வெற்றிக் கரைசேர்த்தார் கே.எல். ராகுல்.

ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். மொத்தம் 263 ஓட்டங்களைக் குவித்ததுடன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

சென்ற ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் வென்றதை அடுத்து, அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நடத்திய அடுத்தடுத்த இரு போட்டித் தொடர்களிலும் வாகை சூடி, இந்திய அணி வெற்றியாளராக வலம் வருகிறது.

சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பாராட்டு

இந்திய அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்டார் அவ்வணித் தலைவர் ரோகித் சர்மா.

இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் ஒட்டுமொத்தமாக 38 ஓவர்களை வீசி, 144 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

“இறுதிப் போட்டியில் மட்டுமன்று. தொடரின் தொடக்கத்திலிருந்தே எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் மிளிர்ந்தனர்,” என்றார் ரோகித்.

குறிப்பாக, தமிழகத்தின் வருணை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

முதல் சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வருண், அவ்வணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மூன்று போட்டிகளில் விளையாடி, எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை (வலது) வெகுவாகப் பாராட்டினார் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா.
மூன்று போட்டிகளில் விளையாடி, எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை (வலது) வெகுவாகப் பாராட்டினார் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா. - படம்: ராய்ட்டர்ஸ்

“வருணின் பந்துவீச்சு புதிராக இருக்கிறது. தொடரின் முதலிரு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. ஆயினும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டிகளில் அவர் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். அதனால், அவரது திறமையை முடிந்த அளவிற்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினோம்,” என்றார் ரோகித்.

தமது அணியினரும் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறிய நியூசிலாந்து அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர், 20 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம் என்றார்.

குறிப்புச் சொற்கள்