புனே: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்கப் பந்தடிப்பாளர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரிய சாதனை படைத்துள்ளார்.
ஓராண்டில் இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் 22 வயதான ஜெய்ஸ்வால்.
ஓராண்டில் தாய்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற மைல்கல்லை எட்டிய ஜெய்ஸ்வால், சற்று நேரத்திலேயே பட்டியலின் முதல்நிலைக்கும் முன்னேறினார்.
முன்னதாக, குண்டப்பா விஸ்வநாத் ஒரே ஆண்டில் 13 போட்டிகளில் விளையாடி 1,047 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்திற்கு எதிராகப் புனே நகரில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் விஸ்வநாத்தை முந்தினார் ஜெய்ஸ்வால்.
அவர் 77 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாண்டில் இந்தியாவில் மட்டும் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,056 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
ஓராண்டில் டெஸ்ட் போட்டிகளில் 30 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ள இரண்டாவது பந்தடிப்பாளர் என்ற பெருமையும் அவரைச் சேரும். இவ்வாண்டு ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஆட்டங்கள் இருப்பதால், அவர் இச்சாதனையை மேலும் நீட்டிக்கலாம்.

