விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது காயமுற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது போட்டியில் பங்கேற்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
பின்தொடைத் தசைநாரில் காயமடைந்துள்ள ஜடேஜா ஹைதராபாத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். காயத்தின் தன்மை குறித்து மதிப்பிட அந்த மருத்துவ அறிக்கை மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாட முடியாமல் போகலாம் என்று இந்திய அணி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதே நேரத்தில், மூன்றாவது போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 28 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது.