ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் சதமடித்து இங்கிலாந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார் ஆலி போப்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியா சென்றுள்ளது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 25) தொடங்கிய முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 421 ஓட்டங்களை எடுத்திருந்தது இந்திய அணி.
ஆயினும், எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் மூன்றாம் நாளில் விரைவில் இழந்து, 436 ஓட்டங்களுக்கு அவ்வணி ஆட்டமிழந்தது.
அதன்பின், 190 ஓட்டங்கள் பின்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, அதிரடியாக ஆடி ஓட்டம் குவித்தது. பின்னர் இடையில் சில விக்கெட்டுகளை மளமளவெனப் பறிகொடுத்து தடுமாறிய அவ்வணி, ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஆயினும், ஒருமுனையில் நிலைத்து ஆடிய போப் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குக் கடும் சவாலாக விளங்கினார். அவருக்கு விக்கெட்காப்பாளர் பென் ஃபோக்ஸ் (34) நல்லாதரவு தந்தார்.
முதல் இன்னிங்சில் ஓர் ஓட்டத்துடன் வெளியேறிய போப், இரண்டாம் இன்னிங்சில் சதம் விளாசினார்.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 316 ஓட்டங்களை எடுத்திருந்தது.
போப் 148 ஓட்டங்களுடனும் ரேகான் அகமது 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பும்ராவும் அஸ்வினும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி 126 முன்னிலை பெற்றுள்ள நிலையில், நான்காம் நாளிலும் அது ஓட்டங்களைக் குவித்தால் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு சிரமமாகலாம் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.