கிரிக்கெட்: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புதல்

கிரிக்கெட்: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புதல்

1 mins read
49fdff9f-b007-4a86-bd26-20dc6698313b
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் திட்டமிட்டபடி பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: தற்போது நடந்துவரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் திட்டமிட்டபடி பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் இந்தியாவுடனான ஆட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவிலிருந்து அது பின்வாங்கியுள்ளது.

அண்மையில் பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் பங்ளாதே‌ஷ் விளையாட மறுப்பு தெரிவித்தது. தன்னுடைய ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் (ஐசிசி) பங்ளாதே‌ஷ் கோரிக்கை விடுத்தது.

கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால் பங்ளாதே‌ஷ் போட்டியிலிருந்து விலகியது.

அதன்பின்னர், பங்ளாதே‌ஷுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்தது.

போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்தது. பொருளியல் ரீதியாகத் தங்களது நாட்டுக்கு இது பெரிய இழப்பு என்றும் இலங்கை வாதிட்டது.

இதையடுத்து, ஐசிசி, பாகிஸ்தான், பங்ளாதே‌ஷ் கிரிக்கெட் வாரியங்கள் உயர்மட்டப் பேச்சுவார்த்தையை நடத்தின.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் பிரதமர் ஷெஃபாஸ் ஷரீஃப் தமது முடிவை மாற்றிக்கொண்டார்.

அனைத்துலக கிரிக்கெட் உறவுகளை வலுப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்