தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: கிண்ணம் வெல்லத் துடிக்கும் பாகிஸ்தான்

2 mins read
9ea0e069-585d-4aca-a707-7990081efb62
அதிரடியாக விளையாடி ஓட்டம் குவித்து இந்திய அணிக்கு மிகுந்த வலுசேர்த்து வருகிறார் தொடக்க ஆட்டக்காரர் அபி‌ஷேக் சர்மா (வலது) - படம்: ஏஎஃப்பி

துபாய்: ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

ஆசியக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இரு அணிகளும் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 ஆட்டமான இது சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) இரவு 10.30 மணிக்குத் துபாயில் நடக்கிறது. 

இந்தத் தொடரின் பிரிவுச்சுற்றிலும் ‘சூப்பர் 4’ சுற்றிலும் பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதாக வீழ்த்தியது.

மேலும், இத்தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் இந்திய வெற்றிபெற்று பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. மறுபக்கம் பாகிஸ்தான் ஒரு சில வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே நம்பியே உள்ளது. 

அபி‌‌ஷேக் அதிரடி

இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உள்ளார் அபி‌ஷேக் சர்மா. அவர் விரைவாக ஓட்டங்கள் குவிப்பதால் மற்ற ஆட்டக்காரர்கள் பொறுமையாக விளையாட நேரம் கிடைக்கிறது.

அபி‌‌ஷேக்கிற்குக் காயம் ஏதும் இல்லை, அவர் இறுதி ஆட்டத்தில் விளையாடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ஹார்திக் பாண்டியாவின் காயம் குறித்துச்  சரியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பந்துவீச்சில் அனைவரும் கைகொடுப்பதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாக உள்ளது.

பாகிஸ்தான் நம்பிக்கை

பங்ளாதே‌‌ஷை வீழ்த்தியபிறகு பாகிஸ்​தான் அணி​த் தலைவர் சல்மான் அலி ஆகா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“பாகிஸ்தானின் பந்தடிப்பில் முன்​னேற்​றம் தேவை. இறு​திப் போட்​டி​யில் என்ன செய்ய வேண்​டும் என்​பது எங்​களுக்​குத் தெரி​யும். எந்த அணி​யை​யும் வெல்​லக்கூடிய திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணியை வீழ்த்த முயற்சி செய்​வோம்,” என்​று சல்மான் கூறினார்.

தொடரும் சர்ச்சைகள்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் உறவில் நிலவும் விரிசல் இத்தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிரிவுச்சுற்று ஆட்டத்திலும் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்திலும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. 

பிரிவுச்சுற்று ஆட்ட வெற்றியைப் பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும்  அர்ப்பணிப்பதாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். 

அவரது கருத்து அரசியல் ரீதியானது என அனைத்துலகக் கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் புகார் கொடுத்தது.

அதையடுத்து சூர்யகுமாருக்கு ஆட்ட ஊதியத்தில் 30 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது. 

அதேபோல் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஹரிஸ் ரவுஃப், ‌‌‌ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் இந்திய ராணுவத்தைக் குறிக்கும் வகையில் சைகை செய்தனர். அதற்காக அவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 

குறிப்புச் சொற்கள்