சத வேட்டையைத் தொடரும் சாய் சுதர்சன்

2 mins read
5ee68fc5-6883-45e8-aacf-02bb7464fb03
முதல்தரப் போட்டிகளில் தமது ஏழாவது சதத்தை நிறைவுசெய்தார் இந்தியாவின் சாய் சுதர்சன். - கோப்புப்படம்: பிசிசிஐ
multi-img1 of 3

மெக்காய் (ஆஸ்திரேலியா): தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனின் அருமையான செயல்பாடு தொடர்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ‘ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள சுதர்சன், அந்நாட்டு ‘ஏ’ அணிக்கெதிரான அதிகாரபூர்வமற்ற முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தார்.

சவாலான ஆடுகளத்தில் 103 ஓட்டங்களை எடுத்தார் சுதர்சன். தேவ்தத் படிக்கல் 88 ஓட்டங்களை எடுக்க, இந்திய ‘ஏ’ அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 312 ஓட்டங்களைச் சேர்த்தது.

ஒட்டுமொத்தத்தில், முதல்தரப் போட்டிகளில் சுதர்சனுக்கு இது ஏழாவது சதம்.

முதல் இன்னிங்சில் இந்திய ‘ஏ’ அணி 107 ஓட்டங்களையும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி 195 ஓட்டங்களையும் எடுத்தன.

முதல்தரப் போட்டிகளில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று வெவ்வேறு நாடுகளில் சதமடித்துள்ளார் 23 வயதான சுதர்சன்.

அண்மையில் டெல்லி அணிக்கெதிரான ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் அவர் தொடக்கப் பந்தடிப்பாளராகக் களமிறங்கி 213 ஓட்டங்களை விளாசியிருந்தார். துலீப் கிண்ணப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார்.

கடந்த ஆண்டு சரே அணிக்காக இங்கிலிஷ் கவுன்டி போட்டிகளில் விளையாடிய சுதர்சன், நாட்டிங்ஹம்ஷியர் அணிக்கெதிரான போட்டியில் 105 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதனிடையே, அடுத்த பருவ இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.8.50 கோடி கொடுத்து, சாய் சுதர்சனைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இம்மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் இன்னொரு தொடக்கப் பந்தடிப்பாளராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயினும், மெக்காய் நகரில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 19 ஓட்டங்களையே எடுத்தார்.

அதேபோல், இந்திய ‘ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு தமிழக வீரரான பாபா இந்திரஜித் முதல் இன்னிங்சில் 9, இரண்டாவது இன்னிங்சில் 6 என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

குறிப்புச் சொற்கள்