புதுடெல்லி: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகச் செயல்பட்டுவரும் ஷுப்மன் கில், 26, இனி ஒருநாள் போட்டிகளிலும் அவ்வணியை வழிநடத்தவிருக்கிறார்.
இம்மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணிக்கு எதிராகத் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர்களான ரோகித் சர்மாவும் விராத் கோஹ்லியும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மூத்த வீரர்களான அவ்விருவரும் டெஸ்ட், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் 2027ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே, நமீபியா நாடுகளில் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்குமுன் ஒருநாள் போட்டிகளில் கில் தலைமைத்துவ அனுபவம் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே அவருக்குத் தலைமைப் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்றுநர் கௌதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைக்கியா ஆகியோர் ஒருமித்து இம்முடிவை எடுத்துள்ளதாகவும் இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டித் தொடருக்குப்பின், ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாடும்.
இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (தலைவர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணைத் தலைவர்), ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.