அடிலெய்ட்: விளையாட்டில் அவ்வப்போது எதிர்பாராத வகையில் புதுமைகள் நிகழ்வதுண்டு.
அப்படியோர் அதிசயந்தான் சனிக்கிழமையன்று (டிசம்பர் 11) ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நிகழ்ந்தது.
ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் பிரிஸ்பன் ஹீட் அணியும் அடிலெய்ட் ஓவல் அரங்கில் மோதின.
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக முதன்முறையாகக் களமிறங்கினார் இடக்கை வேகப் பந்துவீச்சாளரான லியம் ஹேஸ்கட், 23.
அவரது இரண்டாவது ஓவரில் பிரிஸ்பன் அணியின் நேதன் மெக்சுவீனி சிக்சர் அடித்தார். அவரது மட்டையிலிருந்து பறந்த பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி, பார்வையாளர் பகுதியை நோக்கிச் சென்றது. பார்வையாளர்களில் ஒருவர் அப்பந்தை ‘கேட்ச்’ பிடித்துவிட்டார்.
அவர் வேறு யாருமல்லர்! பந்துவீசிய லியம் ஹேஸ்கட்டின் தந்தை லாய்ட் ஹேஸ்கட்டே அம்மனிதர்.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஒளிவழிக்காக வருணனையாளராகச் செயல்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான ஆடம் கில்கிறிஸ்ட்தான் அவர் யார் என்பதை வெளிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
கிரிக்கெட் விளையாட்டில் இவ்வாறு நடந்திருப்பது இதுவே முதன்முறை எனக் குறிப்பிட்டார் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வான்.
இந்த அதிசய நிகழ்வு குறித்த துண்டுக் காணொளியை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தனது எக்ஸ் பக்கம் வழியாக வெளியிட்டுள்ளது.
போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 56 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.