கராச்சி: சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணிக்குத் தொடக்க வீரர் ரயன் ரிக்கெல்டன் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவருக்குப் பக்கபலமாக அணித்தலைவர் பவுமாவும் ஒத்துழைத்தார்.
ரிக்கெல்டன் 103 ஓட்டங்களும் பவுமா 58 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
இருப்பினும் வேன் டர் டூசன், ஏடிரியன் மர்க்ரம் அதிரடியாக ஆடி அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர். இரண்டு வீரர்களும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ஓட்டங்கள் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தானுக்குத் தொடக்கம் முதலே தடுமாற்றமாக இருந்தது.
முன்னணி வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறியதால் ஓட்டங்கள் குவிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது.
இறுதியில் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ரஹ்மத் ஷா மட்டும் 90 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆட்ட நாயகன் விருதை ரிக்கெல்டன் தட்டிச்சென்றார்.
தென்னாப்பிரிக்க அணியின் அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. அது பிப்ரவரி 25ஆம் தேதி ராவல்பிண்டியில் நடக்கிறது.