பிரிட்ஜ்டவுன்: டி20 உலகக் கிண்ணத்தை இரண்டாம் முறையாகக் கைப்பற்றிச் சாதித்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் வெற்றிக்கனி கையைவிட்டு நழுவியபோதும் தளராது போராடி, இந்திய அணி அதனை எட்டிப் பிடித்தது.
முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைக் குவித்தது. தென்னாப்பிரிக்க அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து, 169 ஓட்டங்களை மட்டும் எடுத்து, ஏழு ஓட்டங்களில் தோற்றுப்போனது.
ஒருகட்டத்தில் 30 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என எளிதான நிலையிலிருந்தது தென்னாப்பிரிக்க அணி.
அப்போது அதனிடம் ஆறு விக்கெட்டுகளும் கைவசம் இருந்தன. ஆனாலும், அதனால் கரைசேர இயலவில்லை.
23 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹென்ரிக் கிளாசன், பாண்டியா வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் வீழ்ந்தது ஆட்டத்தின் போக்கைத் தலைகீழாக மாற்றியது.
அதன்பின் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும் ஓட்டம் விட்டுத்தராமல் கஞ்சத்தனமாகப் பந்துவீசி, தென்னாப்பிரிக்க அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.
கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே எல்லைக்கோட்டருகே அற்புதமாக ‘கேட்ச்’ பிடித்து, அபாயகரமான ஆட்டக்காரர் டேவிட் மில்லரை வெளியேற்றினார் சூர்யகுமார் யாதவ்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, 15வது ஓவரில் அக்சர் பட்டேல் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததால் வெற்றிக் காற்று தென்னாப்பிரிக்கா பக்கம் திரும்பியது. ஆனாலும், உலகக் கிண்ணம் இன்னும் அதன் பிடியில் சிக்காமல் நழுவியவாறே உள்ளது.
முதலில் பந்தடித்த இந்திய அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. அணித்தலைவர் ரோகித் சர்மா (9), ரிஷப் பன்ட் (0), சூர்யகுமார் யாதவ் (3) என மூவரை அடுத்தடுத்து இழந்தது இந்தியா.
ஆயினும், நான்காவது விக்கெட்டுக்கு விராத் கோஹ்லியுடன் இணைந்த அக்சர் பட்டேல் அணியைச் சரிவிலிருந்து மீட்டார். இருவரும் சேர்ந்து 72 ஓட்டங்களைக் குவித்தனர்.
அக்சர் 47 ஓட்டங்களில் ‘ரன் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
கோஹ்லி 76 ஓட்டங்களை எடுத்தார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுதான். அதுவே அவருக்கு ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுத் தந்தது.
தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ரா, தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதற்குமுன் இந்திய அணி முதன்முறையாக 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.