புதுடெல்லி: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரில் புதன்கிழமை (பிப்ரவரி 26) நடந்த ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் எட்டு ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரான் அருமையாகப் பந்தடித்து 177 ஓட்டங்களைக் குவிக்க, அவ்வணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்களைச் சேர்த்தது.
அதனைத் தொடர்ந்து, பந்தடித்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 120 ஓட்டங்களை விளாசியபோதும் அவ்வணி ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் 317 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கான் வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலும் தோற்றுப்போனதால் இங்கிலாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.
இதனையடுத்து, “அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தானின் சீரான, தொடர்ச்சியான எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது. அதனை அவர்கள் பழக்கமாக்கிக் கொண்டுள்ளதால், இனிமேலும் அவர்களின் வெற்றியை வியப்பளிக்கும் வெற்றி எனச் சொல்ல முடியாது,” என்று சச்சின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துணைக் கண்டச் சூழல்களில் இங்கிலாந்து அணியால் சிறப்பாகச் செயல்பட முடியாததை இத்தோல்வி காட்டுகிறது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்றுநர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின்போது ஆப்கான் அணியின் மதியுரைஞராகச் செயல்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும் அவ்வணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர். அதுபோல், ஆப்கான் அணி வெற்றிக்குத் தகுதியானது என்றும் கடந்த ஈராண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடாததால் இங்கிலாந்து அணியின் தோல்வி வியப்பளிக்கவில்லை என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வான் பதிவிட்டுள்ளார்.
‘ஏ’ பிரிவிலிருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.