கிங்ஸ்டன்: அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் புதிய சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சனிக்கிழமை (ஜூலை 26) மூன்றாவது போட்டியில் டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இதன்மூலம் அனைத்துலக டி20 போட்டிகளில் அதிவேகமாகச் சதம் அடித்த ஆஸ்திரேலியர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார்.
முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களை எடுத்தது.
அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் 36 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார். அணித்தலைவர் ஷே ஹோப் 57 பந்துகளில் 102 ஓட்டங்களை விளாசினார்.
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா ஒன்பது ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன் பின்னர் டிம் டேவிட் சூறாவளியாக மாறினார். 11 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் எனத் தனியாளாக வெஸ்ட் இண்டீஸ் அணியை அவர் சிதறடித்தார்.
16.1 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா இலக்கை எட்டி, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
டிம் டேவிட் சிங்கப்பூரில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் அவர் சிங்கப்பூர் அணிக்காக விளையாடினார். பின்னர் 2022ஆம் ஆண்டுமுதல் ஆஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் முழு உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில், அனைத்துலக டி20 போட்டிகளில் வேகமாகச் சதம் அடித்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லரும் இந்தியாவின் ரோகித் சர்மாவும் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் 35 பந்துகளில் சதம் விளாசினர்.
தற்போது டிம் டேவிட் 37 பந்துகளில் சதமடித்து, இந்தியாவின் அபிஷேக் சர்மாவுடன் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

