ஃபிரோஸ்பூர்: எதிராளி வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பிய கிரிக்கெட் வீரர் அடுத்த சில நொடிகளில் மாரடைப்பால் ஆடுகளத்திலேயே மயங்கிச் சரிந்து மாண்டுபோனது அதிர்ச்சி அளித்துள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், ஃபிரோஸ்பூரில் நடந்த ஓர் உள்ளூர்ப் போட்டியின்போது நிகழ்ந்தது.
அந்த விளையாட்டாளார் ஹர்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
அதில், ஹர்ஜித் பந்தை சிக்சருக்குத் தூக்கி அடிப்பதும் ஆடுகளத்தின் நடந்துசெல்வதும், ஆடுகளத்தின் நடுப்பகுதிக்கு சென்றதும் அப்படியே மயங்கி முழந்தாளிட்டபடி அமர்வதும், பின்னர் அப்படியே தரையில் சாய்வதும் தெரிகிறது.
ஹர்ஜீத் தன்னுணர்வை இழந்ததும் சக விளையாட்டாளர்கள் அவருக்கு ‘சிபிஆர்’ எனும் இதய இயக்க மீட்புச் சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆயினும், அது பலனளிக்கவில்லை. மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே அவர் மாண்டுபோனது தெரியவந்தது.
ஃபிரோஸ்பூரில் உள்ள டிஏவி பள்ளித் திடலில் அப்போட்டி நடந்தது.
இதுபோல, 2024 ஜூனில் மும்பையில் நடந்த போட்டி ஒன்றின்போது ராம் கணேஷ் என்ற 42 வயது ஆட்டக்காரர் சிக்சர் அடித்ததும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதே ஆண்டில், புனே நகரில் இம்ரான் பட்டேல் என்ற 35 வயது ஆடவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
அண்மைய ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.