பெர்த்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ளது.
அதற்குமுன், ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் விளையாடிவரும் இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக, இந்திய அணி பயிற்சிப் போட்டியில் விளையாடவிருந்தது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
அண்மையில் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் இழந்து, இந்திய அணி தலைக்குனிவைச் சந்தித்தது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்களில் பலர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லாததால் தங்களுக்குள் இரு அணிகளாகப் பிரிந்து, மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் அவர்கள் விளையாடுவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அந்த ஆட்டம் மூடிய அரங்கினுள் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் எவரும் அதனை நேரில் காண முடியாது.
பெர்த் வாக்கா அரங்கில் நடைபெறும் அந்த மூன்று நாள் பயிற்சி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவுறும்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமெனில் ஆஸ்திரேலிய அணியை 4-0 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். நியூசிலாந்திடம் தோற்றதை அடுத்து, இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு இறங்கியது. ஆஸ்திரேலிய அணி பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது.
தொடர்புடைய செய்திகள்
அதனால், அணித்தலைவர் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரிஷப் பன்ட், ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில் உள்ளனர்.
ரோகித்தைப் பொறுத்தமட்டில், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.